Tuesday, August 17, 2010

சிவக்காமல் விடியாது

17.8.2010 தேவி வார இதழில் வெளியான கவிதை


ஆண்ட இனம் சொந்த நாட்டில்
அடிமையாக வாழ்வதா?
அந்நியர்கள் எங்கள் மண்ணில்
அத்துமீறி நிற்பதா?


அற மற்ற அடக்குமுறை
வரம்பற்று போவதா? தமிழர்
உயிரென்றால் ருசிபார்த்து
உறவாடிக் குடிப்பாதா?


எத்தனையோ இனப் போரை
ஆதரித்த உலகம்..
ஈழப்போராட்ட விடுதலையை
அலட்சியமாய் பார்த்ததேன்?



கொத்துக் கொத்தாய் தமிழர்களை
கொன்றொழித்த போதிலும்..
வாயிருந்தும் ஊமையாய்-உலகம்
வேடிக்கைப் பார்த்ததேன்?


மனித உரிமைக்கு குரல் கொடுத்த நாடுகள்
ஈழத்தமிழர்களின் உயிர் அறுக்க
ஆய்தத்தை தந்ததேன்?


நாதியற்ற இனமாக தமிழர் இனம் போனதோ!
தமிழர் உயிரோடு நடமாட
எங்கு சென்று ஒளிவதோ?


வாடகைக்கு வாழ்வது போல்
சொந்த நாட்டில் வாழ்வதா?
வாடகைக்கு வந்தவர்கள்
வாலாட்டித் திரிவதா?


வாழ்வதற்கு நாடு கேட்டால்
வாளை கொண்டு அறுப்பதா?
விடுதலைக்கு விடை கேட்டால்
விலங்கிட்டு அடைப்பதா?


வாக்குச் சீட்டுப் போடவா?
கட்டை விரல் முளைத்தது!
பேசாமல் இருப்பதற்கா உனக்கு
நாக்கு ஒன்று வந்தது!


இறையாண்மை இல்லையென்றால்
இருட்டறையின் வாழ்வு-நாம்
உரிமையின்றி வாழாமல்
உயிரென்ன உயிரு?...


இறையாண்மை சிலருக்கு எளிதாகப் புரியாது
வீறுகொண்ட விடுதலையை மூடி வைக்க முடியாது
நெருப்புத்துண்டுகளை கரையான்கள் அரிக்காது
இன உரிமைப் போராட்டம்
சிவக்காமல் விடியாது..


-கவிபாஸ்கர்

நன்றி: மாலை முரசு

0 கருத்துகள்: