Friday, September 7, 2007

இது ஒரு கவிதை பத்தாயம்

இது ஒரு கவிதை பத்தாயம்
 
தொட்டில் கனவு நூலை பற்றி செ.தமிழ்ச்செல்வன்
 
          'புத்தகங்களோடு போர் செய்து வாழ்க்கையை  சீர் செய்து கொள்' என புத்தங்களோடு போர் செய்வது பலருடைய வழக்கம். சமீபத்தில் என் நண்பரை பார்க்க அவர் வீட்டிற்கு சென்றிருந்த போது அவரின் தனி அறையில் அமர்ந்திருந்தேன். அவரை புத்தக புழு எனலாம். அவருடைய புத்தக அலமாரியில் எழுதியிருந்த ஒரு வாசகம் இன்னும் என்னுள் சஞ்சரித்துக் கொண்டே இருக்கிறது. "ஒரு நல்ல நூலை போல் ஒரு நல்ல நண்பனோ உறவினரோ எனக்கில்லை" என்று எழுதப்பட்டிருந்தது.
 
             ஒரு நல்ல நூலைவிட இவ்வுலகில் வேறென்ன இருக்கிறது? நல்ல புத்தகங்கள் என்ற வரிசை அலமாரியில் தொட்டில் கனவும் இருக்கும்.  
 
             இப்பொழுது கவிதைக்கான களம், தளம் வெவ்வேறாக பரிணாமம் அடைந்து வருகிறது. கைம்பூன், சென்றியு இன்னும் பல படிமங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இல்லாமல் எதார்த்தங்களோடும் சமூக அவலங்களையும் சீர் கேடுகளையும் சமூக முடிச்சிக்கான தீர்வுகளையும் சமூகப்பசிக்கு பாலூட்டும் வகையில் கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார் கவிபாஸ்கர்.
 
இவர் கவிஞர் மட்டுமல்ல. நல்ல ஓவியர். சிறந்த பாடலாசிரியரும் கூட. எல்லாத் தளங்களிலும் முனைப்போடு செயல்பட்டு வருபவர். தொட்டில் கனவு அட்டைப் படம் மிக அழகான தேர்வு. பலூன்களுக்காக அழும் குழந்தைகளுக்கு மத்தியில் இவரின் அட்டைப்படக் குழந்தை பாலுக்காக அழுகிறது. நகரத்தில் வசித்து வந்தால் கூட நடவுப்பாட்டிலிருந்து மருதாணிவரை, கைத்தறி நெசவாளி கஞ்சிக்கா காத்திருந்ததையும் அவன் வாழ்க்கை நஞ்சுப் போனதையும் வரதட்சணையையும் மாற்றுக் கோணத்தோடு பார்த்திருப்பது இவரின் படைப்பாளுமையை அடையாளப்படுத்துகிறது.
 
ரேஷன் கடையில்
இலவச வேட்டி சேலை வாங்க
எப்படியோ முட்டி மோதி
கடைசி ஆளாக நிற்கிறார்
கைத்தறி நெசவாளி.
 
இருட்டு என்னிடம்
வெளிச்சம் கொடு என
வரதட்சணை கேட்டது
நான் தீக்குளித்தேன்
மெழுகுவர்த்தி
 
இப்படியார் ஒவ்வொரு கவிதையும் வாசிக்கும் நம்மை ஒவ்வொரு சூழலுக்கும் அழைத்து செல்கிறது. இளம் படைப்பாளிகளுக்கு இவரினக் கவிதைகள் வழிகாட்டியாய் அமைந்திருக்கின்றன. மாணவர்களும் இளைஞர்களும் வைத்திருக்க வேண்டிய புத்தகம். வாசிக்க வேண்டிய புத்தகம். எங்கு கற்றோரோ முதல் தொகுப்பிலேயே வாசிப்போரை வசியம் செய்யும் வித்தையினை. இந்த தொட்டில் கனவை இலக்கிய உலகம் நல்ல புத்தகங்களோடு தன் வரவில் வைத்துக் கொள்ளும்.  வாழ்த்துக்கள்..
 
நன்றி: துடிப்பு, மாத இதழ், ஆகத்து 2007.