Tuesday, August 17, 2010

சிவக்காமல் விடியாது

17.8.2010 தேவி வார இதழில் வெளியான கவிதை


ஆண்ட இனம் சொந்த நாட்டில்
அடிமையாக வாழ்வதா?
அந்நியர்கள் எங்கள் மண்ணில்
அத்துமீறி நிற்பதா?


அற மற்ற அடக்குமுறை
வரம்பற்று போவதா? தமிழர்
உயிரென்றால் ருசிபார்த்து
உறவாடிக் குடிப்பாதா?


எத்தனையோ இனப் போரை
ஆதரித்த உலகம்..
ஈழப்போராட்ட விடுதலையை
அலட்சியமாய் பார்த்ததேன்?



கொத்துக் கொத்தாய் தமிழர்களை
கொன்றொழித்த போதிலும்..
வாயிருந்தும் ஊமையாய்-உலகம்
வேடிக்கைப் பார்த்ததேன்?


மனித உரிமைக்கு குரல் கொடுத்த நாடுகள்
ஈழத்தமிழர்களின் உயிர் அறுக்க
ஆய்தத்தை தந்ததேன்?


நாதியற்ற இனமாக தமிழர் இனம் போனதோ!
தமிழர் உயிரோடு நடமாட
எங்கு சென்று ஒளிவதோ?


வாடகைக்கு வாழ்வது போல்
சொந்த நாட்டில் வாழ்வதா?
வாடகைக்கு வந்தவர்கள்
வாலாட்டித் திரிவதா?


வாழ்வதற்கு நாடு கேட்டால்
வாளை கொண்டு அறுப்பதா?
விடுதலைக்கு விடை கேட்டால்
விலங்கிட்டு அடைப்பதா?


வாக்குச் சீட்டுப் போடவா?
கட்டை விரல் முளைத்தது!
பேசாமல் இருப்பதற்கா உனக்கு
நாக்கு ஒன்று வந்தது!


இறையாண்மை இல்லையென்றால்
இருட்டறையின் வாழ்வு-நாம்
உரிமையின்றி வாழாமல்
உயிரென்ன உயிரு?...


இறையாண்மை சிலருக்கு எளிதாகப் புரியாது
வீறுகொண்ட விடுதலையை மூடி வைக்க முடியாது
நெருப்புத்துண்டுகளை கரையான்கள் அரிக்காது
இன உரிமைப் போராட்டம்
சிவக்காமல் விடியாது..


-கவிபாஸ்கர்

நன்றி: மாலை முரசு

Monday, August 9, 2010

அம்மா என்ற அன்பு வார்த்தை

சின்ன வயதில் அம்மாவை விட்டு பிரிந்த மகன் 25 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊருக்கு வருகிறான்..அம்மாவை பார்க்க சொல்லமுடியாத நோயால் இறந்து விடுகிறாள் அவள்..அம்மாவோடு பேச முடிய வில்லையே என கதறி அழுகிறான் இவன்..இப்படி சோகம் ததும்ப பாடுவதாய் காட்சியை விளக்கினார் இயக்குனர் தினகர்.

மென்மையாய் வருடும்படி சோக சிறகால் வருடினார் இசையமைப்பாளர் ரூபன்...என் தூவல் வெள்ளை காகிதத்தில் என் அம்மாவை நினைத்து அழுதது....




பல்லவி

அம்மா என்ற அன்பு வார்த்தை
உலகில் அழியாது!
அம்மா என்ற ஜீவன் இன்றி
உயிர்கள் விடியாது!

கடவுள் என்பது மெய்யா பொய்யா
தெரியவில்லையே தாயே..
கருவை சுமந்த கடவுள் நீதான்
உண்மை என் அம்மா..

உன் வயிற்றில் நானே வந்து
மீண்டும் பிறக்க வேண்டும்!
அடுத்த ஜென்மம் பெண்ணாய்
பிறந்து உன்னை சுமக்க வேண்டும்

தாயே என் அம்மா..
அம்மா என் தாயே!... (அம்மா)


சரணம்-1


ராத்திரியில் பால் நிலவ பிடித்து
எனக்கு நீ தந்தாய்!
உதிரத்தில் பால் கறந்து
உயிரை எனக்கு நீ தந்தாய்..

மார்போடு தொட்டில் செய்து
உறக்கம் எனக்கு நீ தந்தாய்..
சிகரத்தில் ஏறி அமர்ந்து
கடவுளாக நீ வந்தாய்!

ஆகாயம் சுருங்காது-உன்
பாசம் தான் புதையாது
பூலோகம் அழியாது-உன்
தாலாடும் தீராது...

என் சுண்டுவிரல் நகம் கடிச்சி
ருசித்தாய் அம்மா-என்
என் கைபிடிச்சி நடக்க வைத்து
ரசித்தாய் அம்மா.. (அம்மா)



வேட்டைகாரனில் பாடிய சுஜீத் சோக ராகத்தில் பாடி முடித்து என்னை கண்ணீர் மழ்க பாராட்டினார்.